சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியான காரைக்குடி நகர சாக்கோட்டை ஒன்றியம், கண்ணங்குடி, தேவகோட்டைநகர், ஒன்றிய பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி பாண்டி குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், கட்சியினரும், மாற்றுக் கட்சியினரும் பொதுமக்களும் மாலை அணிவித்து வரவேற்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் தேர்போகி பாண்டி பேசியதாவது, தொகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரம், கல்வி வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவோம்.
பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை, அரசு மருத்துவமனை வசதிகள் மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மக்களுக்கு முழு அளவில் பயன்கள் கிடைப்பதற்காக முயற்சிகள் செய்வேன். மேலும் பாரம்பரிய விளையாட்டுகளை பேணி பாதுகாப்பேன். மக்கள் குறைதீர்க்கும் முகாம் தொகுதி முழுவதும் நடத்தப்பட்ட மக்களுக்கு குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும். தொழில், விவசாயம் ஆகிய இரு துறைகளும் வளர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருப்பேன். உள்ளூர் உற்பத்தி பொருள்களை மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சந்தைப்படுத்தி கிராம பொருளாதாரத்தை முன்னேற்ற முயற்சி செய்வேன். தொகுதியிலுள்ள பல நூற்றுக்கணக்கான பெண்கள் செட்டிநாடு தின்பண்டபொருள்கள் தயாரிப்பினை குடும்பத்தோடு செய்து வருகின்றனர். அந்த பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் வியாபாரிகளே அதிகமாக லாபம் அடைகின்றனர்.
இதனால் தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் பெறப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட வழிவகைகள் செய்து தரப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி தேவகோட்டையில் அமைக்க முயற்சி செய்வேன். குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களை காக்க தொகுதியில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். பேருந்து போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு வசதிகள் செய்து தரப்படும். காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாகவும், சங்கராபுரம் ஊராட்சியை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்த சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். காரைக்குடியில் வழக்குகள் அதிகம் இருப்பதால் சப் கோர்ட் அமைக்க அதிகம் ஆர்வம் செலுத்துவேன். தொகுதி மக்கள் வளமும், வளர்ச்சியும் பெற்று அமைதியாக வாழ முழு வழிவகை செய்வேன்.