Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு… தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டு… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல்லில் சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்கள் இரண்டாவது கட்ட பயிற்சியில் தபால் ஓட்டுகளை ஆர்வத்துடன் போட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், ஆத்தூர், பழனி, திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகள் 224 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 224 மண்டலங்களிலும் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 12,832 தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கணினி மூலம் ரேண்டம் முறையில் பணியாற்றுவதற்காக தொகுதி அளிக்கப்பட்டது. மேலும் முதல்கட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டது.

தேர்தல் பணிக்கான ஆணையும் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கு இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் இரண்டாவது கட்ட பயிற்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. திண்டுக்கல் தொகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. அப்போது தபால் மூலம் வாக்கு செலுத்துவதற்கான படிவம், வாக்குசீட்டு ஆகியவை தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

அதனை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டுகளை போட்டனர். அப்போது சீல் வைக்கப்பட்ட பெட்டியில் அவர்கள் தபால் ஓட்டுகளை வரிசையாக நின்று போட்டனர். இதனை தேர்தல் பொது பார்வையாளர் பாபுசிங் ஜமோட் என்பவர் ஆய்வு செய்தார். இதேபோல் ஒட்டன்சத்திரத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பணியாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Categories

Tech |