தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமாரவேல் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் செலவின பார்வையாளர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையை இரண்டு மணி நேரம் ஆகியும் சரிபார்க்காமல் அலட்சியமாக இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.