தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது.
இந்நிலையில் மே 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே 12ம் வகுப்பு பொது தேர்வு மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் நடக்கலாம் என்று தேர்வுத்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.