பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
பெரம்பலூரில் பிரசித்திபெற்ற மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு வாகனங்களில் சுவாமி புறப்பாடு தினமும் இரவில் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், உதய கருட சேவையும் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் மாலை செம்மையாக நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தை கோவில் திருவிக்ரமன்பட்டாச்சாரியார் மற்றும் கோவில் பட்டர் பட்டாபிராமன் ஆகியோர் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து கொண்டு வந்து பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர். இதனையடுத்து சுவாமி புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வரும் காட்சி நடைபெற்றது. வெண்ணெய்த்தாழி உற்சவம் நேற்றும், குதிரை வாகனத்தில் திருவீதி உலா நேற்று இரவிலும் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 10.30 மணி அளவில் தேரோட்டம் நடைபெறவிருக்கிறது. இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், கட்டளைதாரர்கள், திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.