Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் தான் காரணமா..? கஞ்சா வியாபாரி கொடூர கொலை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

பெரம்பலூரில் கஞ்சா வியாபாரியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பலில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சங்குபேட்டை அம்பேத்கர் தெருவில் செங்கோட்டுவேல் என்ற கோட்டை வசித்து வந்தார். இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அதன்பின் சில தினங்களுக்கு முன்பு விடுதலையாகி வெளியில் வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களுடன் நாவல்மரத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் செங்கோட்டுவேலை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் செங்கோட்டுவேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதற்கு முன்னதாக செங்கோட்டுவேலின் நண்பர்கள் முகம்மது மாலிக், விக்னேஷ் ஆகிய இருவரும் அரிவாள் வெட்டை தடுக்க முயன்றதால் அவர்கள் இருவரையும் அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளனர்.

இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து அந்த கும்பலை வலைவீசி தேடி வந்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், முன்விரோதம் காரணமாக செங்கோட்டுவேலை அவரது கூட்டாளிகளான பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் என்பவரது மகன் அய்யனார், அவருடைய அண்ணன்கள் சிவா, ராமராஜ், அறிவழகன், சதீஷ், சண்முகம் ஆகிய ஆறு பேரும் கொலை செய்தது தெரியவந்தது. இந்தநிலையில் செங்கோட்டுவேலின் உறவினர்கள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு சங்குபேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை வழக்கு சம்பந்தமாக அய்யனாரும், அவருடைய அண்ணன் ராமராஜனும் நேற்று முன்தினம் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் அரணாரை வடக்கு காலனியில் வசித்து வரும் பொன்னுச்சாமி என்பவரது மகன் சண்முகம், ஆலம்பாடி ரோடு அன்பு நகரில் வசித்து வரும் நடராஜன் என்பவரது மகன் அறிவழகன் ஆகிய இரண்டு பேரையும் பெரம்பலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீஸ், சிவா ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |