மியான்மரில் ஆயுதப்படை தினத்தன்று ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரில் நடைபெற்றுக்கொண்டிருந்த மக்கள் ஆட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மியான்மரில் ஆயுதப்படை தினத்தன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் சிலர் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறி மியான்மர் ராணுவம் அவர்களை தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலின் போது ராணுவத்தினர் அந்த கூட்டத்தில் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று கூட நினைக்கவில்லை, பொதுமக்கள் அனைவரின் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்நிலையில் மியான்மர் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 97 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபை ” மியான்மருக்கு இந்த நாள் ஆயுதப்படை தினம் கிடையாது, இனி இது ரத்தக்களரியான தினம்” என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளது.