பெரம்பலூரில் வெளிமாவட்ட பெண்கள் இரண்டு பேரை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு(30) என்ற மகன் உள்ளார். இவர் பெரம்பலூரில் உள்ள பாலக்கரை பகுதியில் நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சிறுவாச்சூர் பகுதியில் வசித்து வரும் செல்லமுத்து என்பவரது மகன் சரவணன் வந்து கொண்டிருந்தார். அவரிடம் அன்பு பணம் கொடுத்தால் போதும் பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழலாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து சரவணன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அன்பு மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் திருச்சி மாவட்டத்தில் வசித்து வரும் வெங்கடேசனும், அன்புவும் சேர்ந்து பெரம்பலூரில் தனியார் தங்கும் விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து வெளிமாவட்ட பெண்கள் 2 பேரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தனியார் தங்கும் விடுதிக்கு சென்ற காவல்துறையினர் அந்த இரண்டு பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து அன்புவை கைது செய்த காவல்துறையினர் அவரை பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வெங்கடேசனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.