சுவிட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுடன் ஒரு வீட்டின் வாசலில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இருக்கும் பாஸல் மண்டலத்தில் உள்ள Morgertenring டிராம் நிறுத்தத்தின் அருகே உள்ள ஒரு வீட்டின் வாசலில் நேற்று அதிகாலையில் 3:15 மணியளவில் முகம் முழுக்க காயமாக ஒரு இளைஞர் படுத்து கிடந்துள்ளார். அவரின் அருகே ஒரு நபர் நின்று கொண்டு தனக்கு தெரிந்த ஜெர்மன் மொழியில் பேசி வழிப்போக்கர்களிடம் உதவி நாடியுள்ளார்.
இதனால் மனது இறங்கி இரண்டு நபர்கள் அருகில் வந்துள்ளனர். ஆனால் உதவி கேட்டுக்கொண்டிருந்த நபரோ திடீரென்று தப்பிச்சென்றுள்ளார். எனினும் அந்த வழிப்போக்கர்கள் அவருக்கு விரைவாக முதலுதவி செய்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினருக்கும், அவசர உதவி குழுவினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, அந்த இளைஞருக்கு பதினாறு வயது இருக்கும் என்றும், அவர் தற்போது மருத்துவமனையில் அவசர பிரிவில் உள்ளார் என்று கூறியுள்ளனர். எனினும் அந்த இளைஞருக்கு இந்த நிலை ஏற்பட காரணம் என்ன? மேலும் எதற்காக வீட்டின் வாசலில் கிடந்தார் போன்ற எந்தவித விவரங்களும் தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் பொதுமக்களிடம் உதவியை நாடியுள்ளனர்.