தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மலைப்பாதையில் ரப்பர் ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மவுலானா முகமது அலி ஜின்னா தெருவில் அப்துல்சமது (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கேரள மாநிலம் கோட்டயத்திற்கு சென்னை தாம்பரத்திலிருந்து லாரியில் பொருள்களை ஏற்றி செல்வது வழக்கம். அதன்படி ரப்பர் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கடந்த 25-ஆம் தேதி கோட்டயம் நோக்கி லாரியில் அப்துல்சமது சென்று கொண்டிருந்தார். தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் என்ற பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அதனை கண்ட லாரி ஓட்டுநர் அப்துல்சமது சுதாரித்துக்கொண்டு லாரியை சாலை ஓரமாக விட்டு விட்டு கீழே இறங்கி ஓடினார். இதற்கிடையில் அந்த லாரியில் ஏற்பட்ட தீ வேகமாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து லோயர்கேம்ப் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் லாரியில் எரிந்த தீயை பொதுமக்களுடன் சேர்ந்து அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் லாரி முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.