சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மங்குடியை ஆதரித்து காரைக்குடி நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியை திணிப்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் ஆகும். எனவே தான் ரயில்வே நிலையம், ஏர்போர்ட் ஆகிய இடங்களிலும் இந்தியை வலியுறுத்துகின்றனர். மேலும் தமிழ், ஆங்கிலத்தில் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டாலும் அதற்கு இந்தியில்தான் பதில் கூறுகிறார்கள். மேலும் இந்தி தெரியவில்லை என்றால் இந்தியர் அல்ல என்கின்றனர். தமிழர்களால் நடத்தப்படும் ஆட்சி, பாரதிய ஜனதா கட்சியின் நிழல் கூட இல்லாத ஆட்சியாக தமிழ் நாட்டிற்கு தேவை.
தி.மு.க. கூட்டணி கட்சிகளின் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். காங்கிரஸ் கட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக சிறப்பாக பணியாற்றிய சாதாரண தொண்டரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். உங்களின் தேவைகளை அறிந்து இவர் செயல்படுவார். அவரிடம் போன் மூலமோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொண்டு குறைகளை கூறமுடியும். நல்ல சேவகராக மாங்குடி உங்களுக்கு இருப்பார். இந்த தேர்தலில் நீங்கள் தமிழர் என்ற உணர்வோடு வாக்களிக்க வேண்டும். தற்போதும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் தான் சிவகங்கை தொகுதியில் களம் காண்கின்றனர். பாராளுமன்றத் தேர்தல் முடிவு போலவே, காரைக்குடி சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் இருக்கும். காங்கிரஸ் கட்சியே இறுதியில் வெல்லும். இவ்வாறு அவர் பேசினார். வேட்பாளர் மாங்குடி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதாவது;- நான் உங்களில் ஒருவன் நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.
மக்களின் தேவைகளை அறிந்து உதவிகளை செய்வேன். சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வளர்ச்சிக்காக சூழன்று பணியாற்றும் கார்த்திக் சிதம்பரம் எம்.பி, உலகின் வளர்ச்சிக்கே வழிகாட்டும் மக்கள் தலைவர் ப.சிதம்பரம் வழிகாட்டுதலில், மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. அவர்களின் வழிகாட்டுதலின் படி தொகுதியை வளர்ச்சி உள்ளதாக மாற்றி காட்டுவேன். அதற்கு நீங்கள் கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டிக்கொள்கிறேன். இந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் நகர தலைவர் பாண்டி மேயப்பன், தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.