என் வீட்டின் முன் நின்று அழைத்தால் நான் அரசியலுக்கு வந்தேன். இனி அரசியலுக்கு வரமாட்டேன் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேட்டியளித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. அதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் திடீரென அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். – அம்மா – தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி அதனை அதிமுகவுடன் இணைப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தீபா, முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். இனி யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பேஸ்புக்கில் பதிவிட்டு அதை நீக்கினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தீபா, என்னுடைய உடல் நிலை காரணமாக நான் அரசியலில் இருந்து விலகுகின்றேன். அரசியலுக்கு வந்ததே தவறு என்று பல முறை யோசித்துள்ளேன். என் வீட்டு முன்பு நின்று கொண்டு தொண்டர்கள் என்னை கட்டாயப்படுத்தி அழைத்ததாலேயே நான் அரசியலுக்கு வந்தேன். இனி அரசியலுக்கு வரமாட்டேன். பெண்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் தரக்குறைவான விமர்சனங்கள் கூடாது என்று அவர் தெரிவித்தார்.