தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்பி ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாய் பற்றி அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவர் அதில் முதல்வரின் தாய் பற்றி அவதூறாக கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் குறித்த விமர்சனத்திற்கு எம்.பி ஆ.ராசா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஆ.ராசா கூறுகையில், என் பேச்சு வெட்டி ஓட்டப்பட்டுள்ளது. எனினும் என் பேச்சை சுட்டிக்காட்டி முதல்வர் கண் கலங்கினார் என்பதை கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். எனவே என்னுடைய ஆழ்மனதில் இருந்து மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார்.