தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் பிரச்சாரத்தின் போது தரக்குறைவாக பேசிய ஆ.ராசா எம்.பி மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான ஆர்.ராசா எம்.பி., தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கீழப்பாவூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அதே போல் ஜெயங்கொண்டம் தொகுதி மீன்சுருட்டியில் தி.மு.க. வேட்பாளர் கண்ணனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இரண்டு இடங்களிலும் பிரச்சாரத்தின்போது தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் மீன்சுருட்டி, கீழப்பழுவூர் ஆகிய இரண்டு காவல் நிலையங்களிலும் ஆ.ராசா எம்.பி. மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.