மாநிலங்களவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு பின் முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேறியதாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.இம்மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பலாமா வேண்டாமா? என்பது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தை நிராகரித்தது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்துள்ள திருத்தம் மீதான வாக்கெடுப்பு தற்பொழுது நடைபெற்றது.
இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்துள்ள பெரும்பாலான திருத்தங்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன. அதன்பின் காங்கிரஸ் உறுப்பினர் திக்விஜய் சிங் அளித்த திருத்தத்தின் மீது வாக்குசீட்டு மூலமாக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், முத்தலாக் தடைச் சட்டத்திற்கு திக்விஜய்சிங் கொண்டு வந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் திக்விஜய்சிங் கொண்டு வந்த திருத்தத்துக்கு ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 100 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேறியதாக மாநிலங்களவை சபாநாயகர் அறிவித்த அவர், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பின் மசோதா அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.