நெல்லை அரசு மருத்துவமனையில் போலி சிகிச்சை பெற்ற பெண் கருவுற்றதால் 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர் காலப் பகுதியைச் சேர்ந்த ஷிபா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. அவர் சிறுவயதிலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகையால், வலிப்பு நோயை கருத்தில் கொண்டு தனக்கு இரண்டு குழந்தைகள் போதுமென , நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த 2014ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
பின்னர் 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்தப் பெண் கருத்தரித்துள்ளார் . இதனால் அதிர்ச்சி அடைந்த ஷிபா தனக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழு மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,
தனக்கும் தன் கருவில் வளரும் குழந்தைக்கும் நெல்லை அரசு மருத்துவமனையின் முதல்வர் தலைமையில் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் . மேலும், தனக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் தமிழக அரசின் சுகாதார துறை செயலாளர் , நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.