தொழிலதிபர் மார்ட்டின் சொந்தமான தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வரும் பழனிசாமி மரணம் கொலை தான் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது
கோவையில் பழனிசாமி என்பவர் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். தொழிலதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் பழனிசாமியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரிடம் நேரில் சந்தித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே கடந்த 3-ம் தேதி மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வெள்ளியங்காடு என்ற இடத்தில் பழனிச்சாமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரின் உயிரிழப்பு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில் பழனிசாமியிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனது தந்தை உடலை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரின் மகன் ரோகின் குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் காசாளர் பழனிசாமி மரணம் தற்கொலை அல்ல கொலை என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையை மருத்துவர் சம்பத்குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.