மதுரையில் தனியார் நிறுவன ஊழியர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முருகேசன் என்பவர் வசித்துள்ளார். இவர் அதே பகுதியிலிருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு திருமங்கலம் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியாக வந்த நாய் அவரது மோட்டார் சைக்கிளின் குறுக்கே பாய்ந்தது.
இதனால் பதறிய அவர் நிலைதடுமாறி அப்பகுதியிலிருந்த மின் கம்பத்தில் பலமாக மோதினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.