ராணிப்பேட்டையில் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவிற்கு சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. அதாவது மலை பகுதியிலிருக்கும் பாறைகளை வெட்டியெடுத்து அதனை ராட்சச இயந்திரங்கள் கொண்டு ஜல்லிகளாகவும், எம் சாண்ட்டாகவும் மாற்றி லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்து செல்வார்கள். இவ்வாறான சூழலில் வாலாஜாவிற்கு அருகே செங்காடு பகுதியிலிருக்கும் பொதுமக்கள் லாரி ஓட்டுனர்களிடம் டன் கணக்கில் கற்களை ஏற்றிக்கொண்டு இவ்வழியே செல்லாதீர்கள் என்று பலமுறை கூறியிருக்கிறார்கள்.
ஆனாலும் லாரி ஓட்டுநர்கள் தற்போது டன் கணக்கில் கற்களை ஏற்றி கொண்டு செங்காடு பகுதி வழியாக சென்றுள்ளார்கள். இதனால் பொதுமக்கள் அந்த லாரிகளை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பதற்றமடைந்த லாரி ஓட்டுனர்கள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அனைவரும் கலைந்து சென்ற பின்னர் லாரியை ஓட்டி சென்றார்கள்.