திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாகன சோதனையின்போது மினி வேனில் ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.78 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பரிசு பொருள்கள் மற்றும் பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மினி வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.78 லட்சம் பணம் வேனில் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து மினி வேனில் வந்தவரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் வங்கி ஊழியர் என்பது தெரியவந்தது. மேலும் கோவையில் உள்ள கிளைக்கு பழனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பணத்தை கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.
ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. அதையடுத்து ஆவணமில்லாத அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின் ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் அலுவலரான சசிகுமாரிடம் அந்த பணத்தை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன் பின் ஒட்டன்சத்திரம் கருவூலத்தில் ஆவணமில்லாத அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது. பழனியில் வாகன தணிக்கையில் ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.