தல-தளபதி மோதலால் நண்பரையே கத்தியால் இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் #RIPVIJAY என்ற ஹாஷ்டகை தல அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வந்தனர். இதற்கு எதிராக #longlivevijay என்ற ஹாஷ்டகை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி நம்பர் ஒன் இடத்தை பிடித்தனர். இது சமூக வலைதளத்திலேயே மிகப்பெரிய மோதலை இருதரப்பு ரசிகர்களிடையே ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் சென்னையில் ஒரே தெருவை சேர்ந்த உமாசங்கர் என்ற தல ரசிகரும் ரோஷன் என்ற விஜய் ரசிகரும் சமூகவலைத்தளத்தில் மாறி மாறி வசைபாடி பதிவுகளை பதிவிட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் அஜித் ரசிகரான உமாசங்கர் எல்லை மீறி பதிவிட ஆத்திரமடைந்த விஜய் ரசிகர் ரோஷன் அவரை கத்தியால் சரமாரியாக தாக்கினார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உமாசங்கரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதையடுத்து ரோஷனை புழல் சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் உமாசங்கரும் ரோஷனும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. தலையா தளபதியா என்ற மோதல் பொதுவாக தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் தற்பொழுது கத்தி குத்து வரை மோதல் பெரிதானது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.