திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவியில் தொடர்ந்து பெய்த மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது குளுகுளு சீசன் ஆரம்பித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிப்பதற்காக வருகை தருகின்றனர். அதற்கேற்றார்போல் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் நேற்று முன்தினம் நகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி ஆகிய அருவிகளில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கொடைக்கானலில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு இருப்பதால் அங்கு குளுமையான சூழல் காணப்படுகிறது.