தேனியில் இரும்பு கடையில் வருமான வரித்துறையினர் 10,00,000 ரூபாய் தொடர்பாக சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரியான நாகையாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கம்பம் பேருந்து நிலையம் அருகே இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நாகையாசாமி இரும்பு கடையில் 500 ரூபாய் நோட்டு கட்டு கட்டாக இருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பறக்கும் படையினர் நகையாசாமியின் இரும்புக் கடைக்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் 10 லட்ச ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து நாகையாசாமிடம் பறக்கும் படையினர் விசாரித்தனர்.
அப்போது அவர் தனது மனைவியின் நகையை அடகு வைத்து நிலம் வாங்குவதற்காக 10 லட்ச ரூபாயை வங்கியில் இருந்து பெற்றேன் என்று ரசீதை காண்பித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருமான வரித்துறையினர் கடையிலிருந்த வங்கி கணக்கு புத்தகத்தை சரி பார்த்தனர்.இதில் அவர் கூறியது உண்மை என்று தெரிந்த பிறகு 10 லட்ச ரூபாயை நாகையாசாமியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.