சிவகங்கை அருகே தந்தை, மகன் இருவரும் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே உள்ள அழுபிள்ளைதாங்கி கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாமிநாதன் என்ற மகன் இருந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெள்ளாடுகளை வளர்த்து வந்துள்ளனர். கருப்பையாவிற்கு மூக்காயி என்ற தங்கை உள்ளார். இவர் பில்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு திரிசங்கு, சிங்கராஜ், தாமோதரன், சுந்தரராஜ் என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சாமிநாதனும், கருப்பையாவும் அழுபிள்ளைதாங்கி கண்மாய்க்குள் ஆடுகளை மேய்த்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தாமோதரனுடைய நாய் அவர்களுடைய ஆட்டை கடித்து உள்ளது.
இதனால் ஏற்பட்ட தகராறில் தாமோதரன், சிங்கராஜ், சுந்தர்ராஜ், திரிசங்கு ஆகிய 4 பேரும் சேர்ந்து சாமிநாதன், கருப்பையா ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் கருப்பையா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். சாமிநாதன் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிந்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் சிங்கராஜ், திரிசங்கு, தாமோதரன் ஆகிய 3 பேரும் திருப்புவனத்தில் உள்ள ஜே.எம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள சுந்தரராஜனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.