நாகையில் வாகன சோதனையின்போது ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 500 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் பறக்கும் படை அதிகாரி மீனாட்சி தலைமையிலான குழுவினர் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.1 லட்சம் பணம் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பொரவச்சேரி பகுதியில் வசித்து வரும் அறிவழகன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.1 ஒரு லட்சம் ஆவணங்கள் இல்லாத பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் நாகூர்-நாகை சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு நாகூரிலிருந்து ஆழியூர் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.62,500 பணம் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அவர் தெத்தி பகுதியில் வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 62,500 ஆவணமில்லாத பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.