மஹாராஷ்டிராவில் புலிகள் காப்பகத்தில் வனத்துறை பெண் அதிகாரி ஒருவர் உயர் அதிகாரிகளின் தொடர் தொல்லையால் மனமுடைந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ளது மெல்காத் புலிகள் வன சரணாலயம். இதில் தீபாலி சவான் என்ற 28 வயது இளம்பெண் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். மகாராஷ்டிராவில் இவரை “வனத்துறையின் லேடி சிங்கம்” என்று அழைக்கும் அளவிற்கு தைரியம் மிக்கவராம்.
அதாவது உள்ளூரில் ரவுடி என்ற பெயரில் தொல்லை கொடுப்பவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அஞ்சாமல் புலி போன்று வனத்தை பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த வன சரணாலயத்தில் துணை ஃபீல்டு அலுவலர் வினோத் சிவகுமார், தீபாலியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
மது அருந்திவிட்டு கடும் வார்த்தைகளால் அடிக்கடி திட்டியுள்ளார். மேலும் அவரது பணியை கெடுக்கும் வகையில் மனரீதியாக தொல்லை கொடுத்தோடு பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் தீபாலியின் ஒரு மாத ஊதியத்தையும் நிறுத்தியுள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த தீபாலி கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று அமராவதியில் அவர் வசிக்கும் வனத்துறையின் குடியிருப்பில் தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
மேலும் அவரே கைப்பட எழுதிய கடிதத்தில், “என்னை மாதம் ஒருமுறை கூட குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் இரவு நேரங்களில் சிவகுமார் தனியாக என்னை வரச்சொன்னார்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது வினோத்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென்று பீல்டு ஆபீசர் சீனிவாச ரெட்டி தலைமறைவாகியுள்ளார். இவரை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.