இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து, விண்ணப்பங்கள் பெறுவது நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கபில்தேவ், அன்ஷூமன் கெயிவாட், சாந்தா ரங்கசாமி உள்ளிட்டவர்கள் பெற்றனர். இவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை வருகின்ற ஆகஸ்ட் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் தேர்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி விண்ணப்பம் செய்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டாம் மூடி 2 வருடங்களுக்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இம்முறை தேர்வு செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.