பெரம்பலூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூராட்சி ஏழாவது வார்டு முன்னாள் உறுப்பினராக பணியாற்றியவர். மேலும் இவர் அ.தி.மு.க. பிரமுகர். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினரை அழைத்து கொண்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன் பின் நேற்று காலையில் வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு உள்ளே சென்று சோதித்து பார்த்தார்.
அப்போது வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தோடு, ரூ. 25 ஆயிரம் மற்றும் வெள்ளி கொலுசுகள் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டின் முன் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்ததுள்ளது. இதுகுறித்து அரும்பாவூர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.