தமிழகத்தில் இன்று முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதுமட்டுமன்றி விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில் விவசாயத்திற்கு ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து, விவசாய இணைப்புகளுக்கு இன்று முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறையால் மின்தேவை வழக்கத்தை விட கூடுதலாக 500 மெகாவாட் அதிகரிக்கும் என தெரிகிறது.