அதிமுக டெபாசிட் இழக்க பிரதமர் மோடி நமக்கு உதவி செய்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
போடியில் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பழநி செல்லும் வழியில் திடீரென ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினார். திமுக வேட்பாளர் சக்கரபாணியை ஆதரித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மெயின்ரோட்டில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர. சக்கரபாணிக்கு நடந்து ஆதரவு திரட்டினார். பகல் 1 மணிக்கு கொளுத்தும்வெயிலில் சாலையில் இறங்கி நடக்கத்தொடங்கியவர் 1. 30 மணி வரை தாராபுரம் சாலை சந்திப்பு வரை நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் வேட்பாளர் அர. சக்கரபாணி, திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் நடந்துசென்றனர். இளைஞர்கள் ஆர்வமாக ஓடிவந்து ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து பழநி சென்றவர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு பழநி பேருந்துநிலையம் அருகே திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அதிமுகவினர் வெற்றிபெற்றால் அதிமுகவினராக இருக்கமாட்டார்கள், பாஜகவினராக தான் இருப்பார்கள். அதற்கு உதாரணம் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் தான். எனவே அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காத அளவிற்கு தேர்தல் பணிசெய்யவேண்டும். அதற்கு பிரதமர் மோடியும் நமக்கு உதவி செய்கிறார். எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் திமுகவிற்கு வெற்றிதான். தாராபுரம் வந்த பிரதமர் மோடி உண்மையைச் சொல்லாமல் பொய்யை சொல்லி விட்டு சென்றுள்ளார். பிரதமர் உண்மையை தெரிந்து பேச வேண்டும். எழுதிக் கொடுத்ததை எல்லாம் பேசிச்சென்றால் அவர் பிரதமர் கிடையாது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் திமுகதான் வெற்றிபெறும். அதிமுக எதிர்கட்சி வரிசையில் கூட உட்காரமுடியாது. இந்த தேர்தலுடன் அதிமுக முடிந்துவிட்டது. திமுக ஆட்சி அமைந்தவுடன் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் இயற்றப்படும், தமிழகத்தின் சுய மரியாதையை, தன்மானத்தை காப்பாற்ற திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தால்தான் நமது நோக்கம் நிறைவேறும் என்றும் தெரிவித்தார்.