திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை சட்ட மன்ற தொகுதியில் உடுமலைப்பேட்டை நகராட்சி, 3 பேரூராட்சிகள் மற்றும் 57 ஊராட்சிகளும் அடங்கும். இதுவரை 15 சட்ட மன்ற தேர்தலை சந்தித்த தொகுதியாகவும் உள்ளது. 2001 ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவே இத்தொகுதியில் வென்று இருக்கிறது. இத்தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,65,228 ஆகும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, நூற்பாலைகள், காற்றாலைகள் போன்றவை இங்கு பிரதான தொழில்களாக உள்ளன.
விவசாயிகளின் முக்கிய பிரச்சனையாக விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றும், பாசனத்திற்கு தேவையான நீரும் கிடைக்க ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. உடுமலை சட்ட மன்ற தொகுதியில் 300க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழில் மறுசுழற்சி செய்யப்படும் தொழில் என்பதால் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
மேலும் இத்தொகுதி எம்.எல்.ஏ தொகுதி நிதியிலிருந்து முகில்தொழுவு, கோழிக்குட்டை போன்ற பல்வேறு இடங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள், உடுமலைப்பேட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றபட்டுள்ளன. கிராம ஊராட்சிகளில் உள்ள ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன, ஜமீன்ஊத்துக்குளியில் கழிவுநீர் வாய்க்கால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
தேங்காய் நார் சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம் இருப்பதால் இதனை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். இங்கு விளைவிக்க படும் தேங்காய்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தேங்காய் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இனி வரும் தேர்தலிலாவது அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் சட்ட மன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.