கொரோனா தொற்றின் காரணமாக ,திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தாக்கம், உலக நாடுகள் முழுவதிலும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் ,கொரோனா வைரஸ் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உருமாறிய கொரோனா வைரஸின் , 2வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ,அதிக அளவு பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்படும் இடங்களான திருப்பதி ஏழுமலையான் கோவில், வைகுண்டம் காத்திருப்பு அறைகள், முடி காணிக்கை செலுத்துமிடம் , அன்னதானம் வழங்குமிடம் போன்ற இடங்களில் பக்தர்கள் அதிகமாக கூடுவதால், அந்த இடங்களை சனிடைசர் அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றது. அதோடு பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளில்,ஒரு அறைக்கு 2 பேர் மட்டுமே தங்க வேண்டும்,என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த இடங்களில் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் ,முகக்கவசம் அணிந்து ,கட்டாயம் சமுக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி கொரோனோ தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளிலிருந்து பக்தர்கள், திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வரக்கூடாது என்றும், காய்ச்சல் சளி உள்ளவர்களும் திருப்பதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். கொரோனா விழிப்புணர்வு குறித்து, திருமலையில் உள்ள ரேடியோ மூலம் , ஐந்து மொழிகளில் பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளில் குறிப்பிட்டுள்ள நேரத்தின் படி,மதியம் 1 மணியளவில் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர் .