சிவகங்கையில் பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி காலம் நீட்டிக்கப்பட்டத்தை கண்டித்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவ-மாணவிகள் 5 ஆண்டு படிப்பை, நான்கு ஆண்டுகள் படித்து முடித்த பின்னரே ஒரு வருட பயிற்சி மருத்துவர்களாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிவார்கள். அதன் அடிப்படையில் 4 ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பை முடித்து ஒரு ஆண்டு கால பயிற்சி மருத்துவர்களாக 99 மாணவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி காலம் முடிவடைந்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
மருத்துவக்கல்வி இயக்குனரகம் பயிற்சி காலம் நீட்டிக்கப்படுவதாக அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் பயிற்சி மருத்துவர்கள் தங்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுவதாக கூறி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்புக் கொடியை சட்டையில் குத்தி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை அந்த அரசாணையை திரும்பபெறும் வரை தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.