திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சொகுசு பேருந்து மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டி அருகே ஆனந்தபுரத்தில் வடிவேல் என்பவர் வசித்து வந்தார். இவரும் கரூர் மாவட்டம் சின்னவாங்கல்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரண்டு பேரும் எரியொட்டில் இருந்து வடமதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அதில் பிரபு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். வடிவேல் மோட்டார் சைக்கிளின் பின் அமர்ந்து கொண்டு சென்றார்.
திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டர் சைக்கிள் சென்று கொண்டிருந்தது போது தேனி போடியில் இருந்து சென்னை நோக்கி அந்த வழியாக வந்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக வேகமாக மோதியது. இதில் வடிவேல் பிரபு ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த வடமதுரை காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்திற்கு காரணமான சொகுசு பேருந்து டிரைவர் சதீஷ்குமாரை மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.