மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்டத்தில் 2000 காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு உரிய தபால் வாக்கு செலுத்துவதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் சிரமங்களை சந்தித்து வந்துள்ளனர். ஒரே நாளில் சட்டமன்ற தேர்தலில் காவல்துறையினர் அனைவரும் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அதன்படி திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற தபால் வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் பேசியதாவது, தேர்தல் பணியில் ஈடுபடுகின்றன பணியாளர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி தபால் வாக்களிப்பதற்காக படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அலுவலர்கள் தேர்தல் வகுப்பு நடைபெறும் இடத்தில் தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர். சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 735 காவல்துறையினரும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 156 காவல்துறையினரும், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 351 காவல்துறையினரும், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 771 காவல்துறையினரும் தபால் வாக்களித்தனர். இது தவிர 474 காவல்துறையினர் வெளி மாவட்டத்தில் இருந்து இங்கு பணிபுரிபவர்கள் என அனைவரும் தபால் வாக்கு செலுத்தினர். தபால் ஓட்டு இந்த சட்டமன்ற தேர்தலில் 2000 காவல்துறையினர் போட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.