பெரம்பலூரில் திருமணமான 45-வது நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சத்திரமனை கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செண்பகம், ரஞ்சிதா என 2 மகள்கள். இதில் இளைய மகள் செண்பகத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தில் வசித்து வரும் கண்ணன் என்பவரது மகன் மணிவேலுடன் சமயபுரத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து செண்பகம், மணிவேல் இருவரும் சென்னையில் வசித்து வந்துள்ளனர். கடந்த 28-ஆம் தேதி செண்பகத்தின் தந்தை சென்னைக்கு சென்று செண்பகத்தை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுந்தரம் காலையில் கூலி வேலைக்கு சென்று விட்டார்.
தண்ணீர் பிடிப்பதற்காக தாய் ராஜம்மாள் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் செண்பகம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் செண்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் காவல்துறையினர் செண்பகத்தின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து செண்பகம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.