பெரம்பலூர் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பு வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் அந்த அளவிற்கு பகல் நேரத்தில் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் 102 டிகிரி வெயில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே உள்ளனர். அதன்பின் மாலை நேரங்களில் மட்டும் வெளியில் வருகின்றனர். சாலையில் நடந்து செல்வோர் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் குடை பிடித்து கொண்டும், பெண்கள் துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும், தலையில் துணி போட்டு கொண்டும் செல்கின்றனர்.
வாகன ஓட்டிகள் சாலையில் அனல் காற்று வீசுவதால் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை தீர்ப்பதற்காக பொதுமக்கள் கரும்புச் சாறு, பழச்சாறு, இளநீர், மோர், முலாம் பழச்சாறு, தர்பூசணி, கூல் ஆகியவற்றை கடையிலிருந்து வாங்கி பருகி வருகின்றனர். இதனால் அந்த கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட பொது மக்களால் இந்த அளவிற்கு வெயில் கொளுத்துவதையே சமாளிக்க முடியவில்லை. கத்தரி வெயில் என்கின்ற அக்னி நட்சத்திர வெயில் மே மாதம் 4-ம் தொடங்க உள்ளது. இதை பொதுமக்கள் எவ்வாறு சமாளிக்க போகிறோமோ என்று தற்போதே புலம்ப ஆரம்பித்தனர்.