அமெரிக்காவில் பெற்றோர் மற்றும் சகோதரன் கொலை செய்யப்பட்ட ரத்தவெள்ளத்தில் 2 குழந்தைகள் 3 நாட்கள் கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா வர்ஜீனியாவில் மைக்கேல் கோல்மன் என்பவர் அவரது மனைவி ரேச்சல்ஒசுனா(34) அவரது மகன் கைரஸ்ஒசுனா(14) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி கோல்மன்,அவரது மனைவி மற்றும் 14 வயது மகனையும் கழுத்தறுத்து ஐவர் கொண்ட கும்பல் ஒன்று கொலை செய்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தற்போது கொலை தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
அதில் இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் வரை குழந்தைகள் இருவரும் பெற்றோர் மற்றும் சகோதரன் சடலங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர் என்றும் பின்னர் கோல்மன் தந்தை பெஞ்சமின் தன் மகன் வீட்டிற்கு வந்தபோது காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் கோல்மன் கை கால்கள் கட்டப்பட்டு கழிவறைக்குள் வைத்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாகவும், கோல்மன் மனைவி மற்றும் அவரது 14 வயது மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர் என்றும் கூறினர்.
ஆனால் மற்ற இரண்டு குழந்தைகளுக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையில் கோல்மன் மிகப்பெரிய கஞ்சா கடத்தல்காரன் என்றும் அவர் வீட்டில் ஒரு லட்சம் டாலர் தொகை வைத்திருந்தார் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சனையில் தான் கோல்மன் குடும்பம் கொலை செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.