வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி நாகை மாவட்டத்தின் மிக முக்கியமான ஒரு தொகுதி ஆகும். இங்கு தான் 1930இல் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இத்தொகுதியின் பிரதான தொழிலாக மீன் பிடித்த, உப்பு தயாரித்தல், விவசாயம் உள்ளன. வேதாரண்யேஸ்வரர் கோவில், சோழர் காலத்து துறைமுகமான கோடியக்கரை, வன உயிரின சரணாலயம், பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவை சிறப்பு அம்சங்களாக உள்ளன. வேதாரணியம் சட்டமன்ற தொகுதியில் ஒரு நகராட்சி, ஒரு பேரூராட்சி மற்றும் 54 ஊராட்சிகள் உள்ளன.
தற்போதைய எம்.எல்.ஏவாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் உள்ளார். வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,92,342 ஆகும். இத்தொகுதியில் தூண்டில் வளைவு துறைமுகம் வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இதனையடுத்து கூட்டுறவு மட்டும் தேசிய வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் இங்கு உள்ள வேளாண் அலுவலகம் பாழ்பட்ட நிலையில் உள்ளதால் விதைகள், உரம் உள்ளிட்டவை மழையில் நனைந்து சேதமடைகின்றன. எனவே இந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று வேளாண் பெருமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுகின்றனர். காஸ்டிக் சோடா தொழிற்சாலை வேண்டுமென்றும், வாசனை திரவிய தொழிற்சாலை வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் வேதாரண்யம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து தரவேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இத்தொகுதியில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கையாக 20 தரை பாலங்கள் உயர்மட்ட பாலங்கள் ஆக மாற்றி கட்டப்பட்டிருக்கின்றன, ஆயத்த ஆடை பூங்கா தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில கோரிக்கைகளை நிறைவேற்றி இருந்தாலும், நிறைவேற்றபடாதா கோரிக்கைகளுடன் வரும் சட்ட மன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ளனர் வேதாரண்யம் தொகுதி வாக்காளர்கள்.