தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சிவகங்கைக்கு வந்த துணை ராணுவ அதிகாரியின் துப்பாக்கியிலிருந்த தோட்டா திடீரென வெளியில் பாய்ந்ததில் பேருந்து கண்ணாடி சேதமடைந்தது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை இராணுவ படையை சேர்ந்த 580 பேர் சிவகங்கை மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வருகை தந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் அவர்களில் பலர் தங்கியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாதுகாப்பு பணி முடிந்து துணை ராணுவத்தினரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்வரப்சிங் என்பவர் மினி பேருந்தில் ஆயுதப்படை குடியிருப்புக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கையில் இருந்த துப்பாக்கியிலிருந்து தோட்டா திடீரென வெளியில் பாய்ந்தது. அதில் பேருந்தின் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கி சேதமடைந்தது. இதுகுறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.