திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு ஊர்வலம் மற்றும் சிலுவை வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஊர்வலம் மற்றும் சிலுவை வழிபாடு புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்றது. புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார். அதனை நினைவு கூறும் வகையில் இயேசுவின் பாடுகள் என தூம்பா பவனியும், சிலுவை பாதையும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் மணிகூண்டு புனித வளனார் பேராலயத்தில் திருப்பாடுகளின் வழிபாடு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நேற்று மாலையில் நடைபெற்றது.
இதனை பங்கு தந்தையர்கள் சாம்சன் ஜெபராஜ், ஜெயசீலன் பிரபு, பாதிரியார் பாலா ஆகியோர் இணைந்து நிறைவேற்றினர். சிலுவைப்பாதையுடன் இந்த திருப்பாடுகளின் வழிபாடு தொடங்கியது. இதில் சிலுவையை சுமத்தல், இயேசு தீர்ப்பிடபடுதல், அவரின் இறப்பு, சிலுவையில் அறையப்படுதல், கல்லறையில் அடக்கம் செய்தல் என 14 நிலைகளாக நினைவு கூறப்பட்டன. அதனை தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனை, இறைவாக்கு வழிபாடு, தூம்பா பவனி, திருவிருந்து நடைபெற்றது.