திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மலர்தூவி மேள தாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேஜஸ் சொகுசு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 6 நாட்கள் பகலில் சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணிக்கு ரயில் எழும்பூரிலிருந்து புறப்பட்டு கொடைரோடு, திருச்சி ரயில் நிலையங்களில் நின்று அதன் பின் மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று வணிகர்கள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திண்டுக்கல்லில் பயணிகள் வருகையை பொறுத்து தொடர்ந்து தேஜஸ் ரயில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி அன்று சென்னை எழும்பூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட தேஜஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு 11.03 மணிக்கு வந்தடைந்தது.
அப்போது அங்கு கூடியிருந்த வணிகர்கள், பொதுமக்கள் மேளதாளம் முழங்க ரயிலில் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் வணிகர்கள் என்ஜின் டிரைவர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்பின் தேஜஸ் ரயில் 11.05 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறுகையில், தேஜஸ் ரயில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது திண்டுக்கல்லில் நின்று செல்கிறது. திண்டுக்கல்லுக்கு ஐந்து மணி நேரத்தில் ரயில் சென்னையிலிருந்து வந்தடையும். ரூ.840 குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.