பேருந்தில் ஒன்றாக பயணம் செய்த முஸ்லீம் வாலிபரையும், இளம் பெண்ணையும் நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூருவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்ற ஒரு பேருந்தில் அன்வர் முஹமத் என்ற முஸ்லீம் வாலிபரும், 23 வயது இந்து இளம்பெண்ணும் பயணம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி படிப்பு முதல் ஒருவரை ஒருவர் அறிந்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த இந்த பேருந்தை ஒரு மர்ம கும்பல் நிறுத்தி அதில் பயணம் செய்த அன்வர் முஹம்மத்தையும், அந்த இளம் பெண்ணையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து படுகாயம் அடைந்த அன்வரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறு காயங்களுடன் தப்பித்த அந்த இளம் பெண்ணுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த மங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் காவல் துறையினர் அன்வரையும், அந்த இளம் பெண்ணையும் தாக்கிய குற்றத்திற்காக பாலச்சந்திரா, தனுஷ், ஜெய பிரசாந்த், அனில்குமார் ஆகிய நால்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட தனுஷ் மீது ஏற்கனவே 4 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இது குறித்து காவல்துறை கமிஷனர் கூறும்போது, இவ்வாறாக தாக்குதல் சம்பவம் கடந்த 4 மாதங்களில் நான்கு முறை நடந்ததாகவும், இந்த வழக்கில் வாலிபரையும் இளம் பெண்ணையும் தாக்கிய விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.