பெரம்பலூரில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி கொலுசை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நற்குணம் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். பிரபாகரன் சுகாதார ஆய்வாளராக குன்னம் தாலுகா முருக்கன்குடியில் பணியாற்றி வருகிறார். இவர் பெரம்பலூர் ரோஸ் நகர் விஸ்தரிப்பு பகுதியில் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதஉயடுத்து பிரபாகரன் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டிற்கு கடந்த 1-ம் தேதி குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இந்நிலையில் பிரபாகரன் வீட்டின் பூட்டு நேற்று காலை உடைக்கப்பட்டிருந்தது.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பிரபாகரனுக்கு இது குறித்து செல்போனில் தகவல் அளித்தனர். அதற்கு அவர் வீட்டின் உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை சோதித்து பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவர்கள் வீட்டின் உள்ளே சென்று சோதித்து பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு நிலையில் இருந்துள்ளது. மேலும் அதிலிருந்த ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.