கர்ப்பிணி மனைவியின் பிரசவ செலவிற்கு பணம் இல்லாததால் இளைஞர் திருடியது மட்டுமில்லாமல் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு பல இடங்களில் வறுமைவாட்டியெடுக்கிறது. வேலை இழப்பு, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் அன்றாட வாழ்வை நகர்த்துவது பலருக்கும் சிரமமாக இருந்தது. இதனால் திருட்டு, கொலை போன்ற வேண்டாத செயல்களில் சிலர் ஈடுபடத் தொடங்கினர். மகாராஷ்டிராவில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மும்பையை சேர்ந்த 23 வயது இளைஞர் ஷேக், சிப் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் நீரஜ் என்பவரிடம் திருடியது மட்டுமில்லாமல் காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் அவரை கொலையும் செய்து விட்டார். ஆனால் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர் மிக விரைவாகவே இளைஞர் ஷேக்கை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தனது மனைவியை பிரசவத்திற்காக சியான் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாததால் திருடியதாகவும் கூறியுள்ளார். எதுவாயினும் கொலை செய்த குற்றத்திற்காக அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.