பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு போடப்பட்ட தடையை நீக்க கூறி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லடாக் பகுதியில் நடந்த மோதலை அடுத்து சீனாவின் செயலியான டிக் டாக் பாதுகாப்பு கருதி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதனிடையே பாகிஸ்தானில் ஒழுக்கமற்ற காணொளிகள் வெளியிடுவதாக கூறி அந்த நாட்டிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டிக் டாக் செயலியில் வெளியிடப்படும் காணொளிகளை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் ஒழுங்குபடுத்துவதாகவும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்றம் டிக் டாக் மீதான தடையை நீக்கக்கோரி உத்தரவிட்டது. அதோடு ஆபாச காணொளிகள் இறைவனைப் பழிக்கும் காணொளிகள் போன்றவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தவறாக நடந்தால் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்பது நினைவில் இருந்தால் மக்கள் தவறான காணொளிகளைப் பதிவிட மாட்டார்கள் என்றும் நீதிபதி கயிஸர் ரஷித் கான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.