சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுபானம் வாங்குவதற்காக மது கடைக்கு வந்த மது பிரியர்கள் சிலர் கடை பூட்டியிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தொகுதியில் உள்ள மதுக்கடைகள் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பிடித்தனர். அந்தவகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலையூர் புறவழிச்சாலையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ஜமீமுன் அன்சார் அலி (27) , ஜெயபிரகாஷ் (42), கோட்டையூர் கிராமத்தில் வடக்கு அண்டக்குடியைச் சேர்ந்த தர்மராஜ் (30), இளையான்குடி கண்மாய்க்கரை பேருந்து நிறுத்தத்தில் திருவுடையார்புரத்தை சேர்ந்த பாஸ்கரன் (48) ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அதன்பின் அவர்களிடமிருந்த 101 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அதன் பின் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர்.