மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டி பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சியில் இருக்கும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவராமன் தனது மோட்டார் சைக்கிளில் புத்தாநத்தம், கல்லாமேடு போன்ற பகுதிகளில் பணம் வசூல் செய்துவிட்டு துவரங்குறிச்சி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த கார் சிவராமனின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் மைய தடுப்பை தாண்டி, மறுப்பக்க சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவராமன் இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் அந்த காரில் பயணித்து படுகாயமடைந்த இரண்டு பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மணப்பாறை பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த வளநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவராமனின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.