வரதட்சணை கொடுமை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தந்தை பெரியார் தெருவில் ஜோதிஸ்ரீ என்ற பி.காம் பட்டதாரி பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அன்னை சத்யா நகரில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜோதிஸ்ரீயிடம் அவரது கணவரும், மாமியார் அம்சாவும் இணைந்து தாங்கள் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதால் உனது பெற்றோரிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி தா என்று கூறி ஜோதிஸ்ரீயை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து தனது பெற்றோரிடம் ஜோதி ஸ்ரீ கூறி கதறி அழுததால் இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஜனவரி மாதம் முதல் தனது கணவரை விட்டுப் பிரிந்து ஜோதிஸ்ரீ சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது துணிகள் மற்றும் சான்றிதழ்களை எடுப்பதற்காக திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஜோதியின் மாமியார் வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்ததை மீறி அந்த வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு ஜோதிஸ்ரீ சென்றதால் கோபமடைந்த அம்சா அந்த அறைக்கு செல்லும் மின் இணைப்பு திடீரென துண்டித்துவிட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதிஸ்ரீ அந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருமுல்லைவாயல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த அறையில் காவல்துறையினர் சோதனை செய்தபோது, தனது தாயாருக்கு ஜோதிஸ்ரீ எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் “பணம் மற்றும் நகை ஆசைப்படும் ஒருவருக்கு ஏன் என்னை திருமணம் செய்து வைத்தீர்கள் அம்மா…? என்று எழுதியுள்ளார்.
இதனை அடுத்து தன் கணவர் நகை, பணம் இருந்தால்தான் தன்னுடன் வாழ்வேன் என்று கூறியதாகவும், நடந்த அனைத்தையும் தன்னால் சொல்ல முடியாத காரணத்தினால் இந்த முடிவை எடுக்க போகிறேன் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கணவரும், மாமியாரும் தான் தன்னுடைய சாவுக்கு காரணம் என்றும், அவர்களை சும்மா விட்டுவிடாதீர்கள்” எனவும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இச்சம்பவம் குறித்து ஜோதியின் தாய் உமா திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரது கணவர் பாலமுருகன் மற்றும் மாமியார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.