குடைவரை சிற்பங்களை பாதுகாக்கும் பொருட்டு தொல்லியல் துறையினர் சிற்பங்களை சுற்றி தேக்கால் ஆன தடுப்பு சுவர்களை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதியில் கோவர்த்தனகிரி குடைவரை சிற்பங்கள் அமைந்துள்ளது. இந்த சிற்பங்களில் காதல் ஜோடிகள் தங்கள் பெயர்களை எழுதி சிற்பங்களை அசிங்கப்படுத்தும் காரணத்தினால் தொல்லியல் துறையினர் சிற்பங்களை பாதுகாக்கும், பொருட்டு தேக்கால் ஆன மர தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள குடைவரை கோவில்கள் சிற்பங்கள் 7 -ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். இதில் கோவர்த்தனகிரி குடைவரை சிற்பம் முக்கிய சின்னமாக விளங்குகிறது.
இந்த சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் காதல் ஜோடிகள் சிலர் தங்கள் பெயர்களையும், காதல் சின்னத்தையும் வரைந்து சிற்பத்தை அசிங்கப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது அதனை உரசிய நிலையில் நின்று செல்பி எடுப்பதாலும் சிற்பங்களை கைகளால் தேய்ப்பதாலும் சிற்பங்கள் மிகவும் சேதமடைகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு மாமல்லபுரம் தொல்லியல் துறையினர் சிற்பங்களை சுற்றி தேக்கு மரத்தால் ஆன தடுப்புகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.